Monday, November 8, 2010

கலைந்த கனவும் சில கண்ணீர் துளிகளும்...(3)


றக்கவும் முடியவில்லை
அழிக்கவும் முடியவில்லை.
என்னதான் முயன்றாலும்
சில நினைவுகளை
புதைக்கத்தான் முடிகிறது.
எரிக்க முடிவதில்லை!...

ற்றவர்களுக்காக மட்டுமே வாழ்கிறேன்!
எனக்காக வாழவும்
கொடுத்திருக்கலாம் இறைவன்
உன்னை!...

சி நிமிட செல்பேசி உரையாடல்கள்
என் வலியை உனக்கு உணர்த்தவே இயலாது.
இந்த கவிதைகள் உன்னைச் சேரும் நாட்களில்
உணர்வாய் என் வலி என்னவென்று!...

கிர்ந்துக்கொள்ளக் கூட முடியாமல்
புழுங்கிச் செத்துக்கொண்டிருக்கிறது
என் இதயம்.
உயிர் கொடுத்த உறவுகளுக்காக
சுமந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளை!...

னக்குப் பிடித்த வாழ்கையை
வாழவிடாத இந்த உலகத்தை
நேசிக்கத் தெரியவில்லை.
பிறர்க்கு மட்டுமே வாழ்வதற்கு
பிறப்பு எதற்கு கடவுளே!...

யாதுமாய் நின்று
பிரிந்துவிட்ட உனக்குப்பின்
யாருமேயில்லை எனக்கு இன்று!...

செத்துவிடலாம் தான்.
ஆனால் எனக்குப்பின்
நம் காதலை யார் காப்பாற்றுவது?!...

ழுதிய கவிதைகளில்
கண்ணீர் அழித்தது போக
இதோ மீதமிருக்கும் இவையும்
காணமல் போகட்டும்
உன்னைப்போல்!...

Wednesday, October 27, 2010

வேலை....!


சுல்தான்பேட்டையில் இருந்து சிவாஜிநகருக்கு செல்லும் பேருந்தில் வழக்கம்போல
கூட்டம் நெருக்கியடித்தது. பாதுகாப்பாய் பெண்கள் மேல் இடிக்காமல் ஓரமாய் பொய் நின்றுகொண்டேன்.
இந்த ஒரு வருடமாய் வேலை தேடி தேடி பெங்களுருவில் தொலைந்து கொண்டிருக்கிறேன்.

கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் படித்துவிட்டு இன்ன பிற சாப்ட்வேர் கோர்சுகளும் முடித்தாயிற்று. என்ன செய்தால் வேலை கிடைக்குமென்றுதான் தெரியவில்லை.
படித்தவனை கேட்டில் நிற்கவைத்து பயோடேட்டா மட்டும் வாங்கிக்கொண்டு முதுகுக்கு பின்னால் கேட்டை அறைந்து சாத்தும் கொடுமை எங்களுக்கெல்லாம் பழகிய ஒன்று. யாருக்குத்தெரியும்? அந்த பயோடேட்டா செக்யுரிட்டியின் மகனுக்கு மழைக்கால கப்பலாகக்கூட மாறலாம்.

மனித வாழ்கையிலே அதிகமாய் அவமானப்படும் காலம், கல்லூரி வாழ்கை மற்றும் வேலை கிடைக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலமே எனத்தோன்றியது. பத்து நாளைக்கொருமுறை வீட்டில் வாங்கும் 1000 ரூபாய் போகும் இடமே தெரியவில்லை. ஒரு வேளை இரு வேளை சாப்பிட்டு எதோ ஓடிக்கொண்டிருக்கிறது. டை கட்டி, கழுத்தில் ஐடி கார்டு போட்டு, காதில் இயர் போன் மாட்டி கம்பனி பஸ்ஸில் போகும் என் வயது இளைஞர்களை பார்க்க பார்க்க பொறாமையாய் இருக்கிறது.

சுய செலவுகளுக்காவது எதாவது கால் சென்டர் வேலை பார்க்கலாம் என்றால் அதற்க்கு தெரு தெருவை அலைந்து அவமானப்படுவதே தேவலாம். சுலபமாய் முகத்துக்கு நேராய் கேட்பான். "you have strong MTI . Mother Tongue Influence " . (டேய் நீங்கல்லாம் அமெரிக்கால பொறந்திங்களா? மதுரைல பொறந்தது என் தப்பா? ) will you leave the company if you get a software job ? (வேற கம்பனிக்காரன் ஒரு லட்ச ரூபா கொடுத்தா நீ போக மாட்டியா? என் படிப்புக்கேத்த வேல கெடச்சா கண்டிப்பா போவேன்.) அட போங்கடா.

இன்றைக்கு எதோ ஒரு கன்சல்டன்சியில் இருந்து கால் வந்திருக்கிறது. பார்க்கலாம்.
வினாத்தாளை பார்த்தவுடனே தெரிந்துவிட்டது. இதுவும் புஸ்சுதான் என்று. கேள்விகளை பார்த்து இதெல்லாம் இருக்கா? இன்னும் படிக்கணுமோ? தலை சுற்றியது. பத்து நிமிட காத்திருப்புக்குப்பின் அழைக்கப்பட்டேன். ஒரு பெண். 25 வயதிருக்கலாம். கால் மேல் கால் போட்டபடி தலையை மட்டும் ஆட்டி கூப்பிட்டாள். அவளின் ஒவ்வரு அசைவிலும் என்னுடைய தாழ்வு மனப்பான்மை எட்டி பார்த்தது. எல்லா கன்சல்டன்சியிலும் கேட்க நேரும் அதே பல்லவி. ஜாப் ஓரியண்டட் ட்ரைனிங். 25 ஆயிரம் ரூபாய். போடி நீயும் உன் ட்ரைனிங்கும் என மனதுக்குள் சொல்லிக்கொண்டே வெளியே வந்தேன்.

பையை தடவிப்பார்த்தேன். 22 ருபாய் இருந்தது. 10 ரூபாய் வீட்டுக்கு போன் பண்ண, 10 ரூபாய் ப்ரொவ்சிங் சென்டர் போய் மெயில் செக் பண்ண. 2 ரூபாய்க்கு சத்தியமாய் எதுவும் சாப்பிட கிடைக்காது. ஒரே ஆறுதல் அம்மாதான். போன் பண்ணாமல் இருக்க முடியாது. நாளை ஏதாவது இண்டர்வியு வரலாம். மெயில் செக் பண்ணாமல் இருக்கவும் முடியாது. இன்னிக்கு ராப்போது பட்டினிதான்.

மதியமும் சாப்பிடாமல் கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது. நிழலாய் இருந்த மரத்தடியில் உட்கார்ந்தேன். அப்பாவிடம் பணம் அனுப்ப சொல்ல வேண்டும். நினைத்தாலே வலித்தது. எவ்வளவு நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தேன் என தெரியவில்லை. தெருநாய் ஒன்று அங்குமிங்கும் மோப்பம் பிடித்தபடி என்னருகே வந்து காலை தூக்கியது. சீ நாயே என துரத்தினேன். அரண்ட நாயின் கண்களில், எனக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி மின்னியதாய் தோன்றியது.

சுய இரக்கம் தின்ன, பசி காதை அடைக்க, எழுந்து நடக்கத்தொடங்கினேன். கண்கள் கலங்குவதாய் தோன்றியது.
தொலைபேசியில் எண்களை அழுத்திவிட்டு காத்திருந்தேன்.

"ஹலோ" , அம்மாதான்.

"அம்மா" தொண்டை அடைக்க கூப்பிட்டேன்.

"என்னப்பா நல்லா இருக்கியா? சாப்டியா? காசு இருக்கா? அப்பாவ அனுப்ப சொல்லவா?"

"அம்மா", உடையத்தொடங்கி இருந்தேன் நான்.

"என்னப்பா என்ன ஆச்சு அழுவுறியா?" "ஹலோ ஹலோ"


Tuesday, June 22, 2010

செரலாக்ஸ் கவிதைகள்.


சற்று முன்பு வரை
சிரித்துக்கொண்டிருந்த பொம்மை
குழந்தை ஊட்டிய பருக்கைகள் காய்ந்து
கையொன்றும் காலொன்றும்
இழந்து கிடக்கின்றது.
மறுபடி எவரேனும் குழந்தையிடம்
சேர்ப்பித்து உயிர்தருவாரா என
பரிதாபப் பார்வை பார்த்தபடி.

************

தன் வாழ்நாளில்
ஐந்து நிமிடமேனும்
ஏதோவொரு குழந்தைக்கு
பூச்சாண்டியாய் வாழ
கொடுத்து வைத்திருக்கிறது
ஒவ்வருக்கும்.

************

பள்ளி சென்ற
குழந்தை பத்திரமாய்
வீடு திரும்புகையில்
தாய் நன்றி கூறுவது
கடவுளுக்கு மட்டுமல்ல!
வேன் ஒட்டுனருக்கும்தான்.

************

யானை சவாரி செய்யும் தாத்தா
கதைகள் கூறும் பாட்டி
புதியதாய் பொம்மைகள் வாங்கிவரும் அப்பா
யாரிடமும் ஐந்து நிமிடங்களுக்கு மேல்
தங்குவதில்லை குழந்தை.
தன் தாயை கண்டபின்பு.

************

தூக்கும் அனைவரிடத்திலும்
பரப்புகிறது குழந்தை.
சிரிப்போடு சிறிது
செரலாக்ஸ் வாசத்தையும்.

************

சாப்பிட முடியாமல்
மீதம் வைத்த
உணவை பார்க்கையில்
உறுத்தியபடி நினைவுக்கு வந்தது.
உணவக வாசலில்
புறக்கணித்த பிச்சைஎடுக்கும்
சிறுமியின் கண்கள்.
************

Friday, June 18, 2010

போங்கடா நீங்களும் உங்க கஸ்டமர் கேரும்...


கடந்த வாரம் என் தனியார் வங்கிக்கணக்கில் இருந்து என் அம்மாவுக்கு (IOB) ஐம்பதாயிரம் ரூபாய் அனுப்பினேன். ஒரே வங்கி அல்லாமல் வேறு வங்கிக்கு அனுப்பினால் இரண்டு நாட்கள் ஆகும் என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் நான்கு நாட்கள் ஆகியும் பணம் என் அம்மாவின் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

என் தந்தை IOB வங்கிக்கு சென்று விசாரித்தபோது, என் அம்மாவின் கணக்குக்கு பதிலாய் வேறு ஒரு நபருக்கு பணம் வந்துள்ளதாய் தெரிவித்தனர். இதனால் பணம் அனுப்பப்பட்ட வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறி திருப்பி அனுப்பி விட்டனர்.

நான் இங்கிருந்து (சிங்கப்பூர்) தனியார் வங்கிக்கு தொடர்பு கொண்டேன். அதற்கு முன்னரே, அவர்களுடைய வலைதளத்திற்கு சென்று, புகார் மின்னஞ்சல் ஒன்றையும் அனுப்பி வைத்தேன். மின்னஞ்சல் அனுப்பிய சிறிது நேரத்தில் automated response ஒன்று வந்தது. (இரண்டு வேலை நாட்களுக்குள் தொடர்பு கொள்ளுவோம் என).

தொலைபேசி வாடிக்கையாளர் எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசியபோது, வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட புகார்களை ஏற்கும் பிரிவிற்கு என்னுடைய அழைப்பை மாற்றினர். அப்போது பேசிய பெண்மணி என்னுடைய கணக்கை சரிபார்த்து, சரியான நபருக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனால் என்னுடைய தந்தை மறுபடியும் வங்கிக்கு சென்று இதனை கூறவே, தங்களால் எதுவும் செய்ய முடியாது எனவும், பணம் இந்த கணக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, தனியார் வங்கி மின்னஞ்சல் அல்லது கடிதம் மூலமாக சான்று அளித்தால் மட்டுமே மேற்கொண்டு எதுவும் செய்யமுடியும் என கூறினர்.

நான் மறுபடியும் என்னுடைய வங்கியை தொடர்பு கொண்டேன். இப்போது பேசிய பெண்ணிடம் என்னைப் பற்றிய விபரங்களை தெரிவித்து விட்டு காத்திருந்தேன். எனக்கும் அவருக்கும் நடந்த உரையாடல் கீழே.

Customer Care: Sir, you only called in the afternoon correct?
Me: Yes Mam. I want to know the details about the funds transfer.
CC: We already told you the details about it.
Me: Yes. But can you make sure, if the funds has been transferred to the right party?
CC: Wait Sir, Let me check again and confirm.

(After 5 mins)

CC: Hello Sir, We have transferred the funds to the account, you have selected while doing the funds transfer.
Me: Okay. Please give me the delivery instruction you have sent to IOB bank. I will proceed further with them.
CC: Sorry. We do not have power to send those instruction to you.
Me: So, what can i do now. IOB will need the letter from you to check further.
CC: Sorry Sir, you can go to the nearest branch and they will help you.
Me: I am in Singapore and i cant go. Please send me the letter in mail now.
CC: No Sir, we cannot provide you like that. You can ask the person, whom you sent the money to visit the nearest branch.
Me: I dont want to send my parents like that. Please send me the instruction now.
CC: Sir, else you send a mail using our website and they will contact you in two working days.
Me: Mam, its already four days since i sent the money. This is not a small amount and please help me in some way. What happens, if i have sent the money for some urgent need and my parents dont receive it on time.
CC: Sir, Please contact your nearest branch.
Me: Okay, If you cannot help me on this, transfer the call to some one who really have power to sort out this.
CC: You can send a mail to our customer support.
Me: I already sent a mail. Give a contact number to whom I can escalate this.
CC: We will take your complaint sir. Our staff will contact you in two days.

இதற்கு மேலும் அந்த பெண்ணிடம் பேச விரும்பவில்லை நான். தொடர்பை துண்டித்து விட்டேன். என் தந்தையிடம், மறுபடி ஒருமுறை வங்கிக்கு சென்று பேசுமாறு கூறினேன். இம்முறை, என் தந்தை அவர்களிடம், அவர்களுக்கு தனியார் வங்கியில் இருந்து வந்த தகவல்களின் விபரங்களை கேட்டார். சரியான தகவல் வந்துள்ளதாகவும், தவறாக வேறு கணக்கிற்கு சென்று விட்டதாகவும் கூறி, பணத்தை என் அம்மாவின் கணக்கில் சேர்த்தனர்.

இவ்விசயத்தில் தனியார் வங்கி மேல் எந்த தவறும் இல்லை. ஆனால், வாடிக்கையாளர் ஒருவர் தொடர்பு கொண்டு பேசும்போது, தேவையான தகவல்களை கூட தரக்கூட அவர்கள் தயாராக இல்லை. குறைந்தபட்சம் அடுத்தக்கட்டமாக புகார் அளிக்க தேவையான தகவல்களை கூட தரவில்லை. மற்றொரு வங்கிக்கு இவர்கள் அனுப்பும் தகவல்கள், CONFIDENTIAL என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஆனால் நான் கேட்டது, இவர்கள் சரியான கணக்கிற்கு அனுப்பியதாக சான்றுக் கடிதம் மட்டுமே.

தினம்தோறும் எத்தனையோ பண பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. பெற்றோர்களின் மருத்துவ செலவு, சகோதரியின் திருமண செலவு, வீட்டுக்கடன், குழந்தைகளின் படிப்பு இன்னும் எத்தனையோ காரணங்கள். ஏதேனும் அவசர தேவை இருந்து பணம் சரியான நேரத்தில் கிடைக்காமல் போனால் ஏற்படும் இழப்புகளுக்கு யார் பொறுப்பு? இரண்டு வருடமாய் மாதா மாதம் வந்து, வங்கிக்கணக்கில் வரவு வைத்துவிட்டுப் போகும் நபருக்காக இரண்டு நிமிடம் செலவு செய்து சரியான தகவல்களை கூற IOB தயாராக இல்லை.

ஆட்டோ ஓட்டுபவர் முதற்கொண்டு, வங்கி, அரசு அலுவலகங்கள் என எங்கும் ஒரே நிலைமைதான். எந்த இடத்திலும் சக மனிதனுக்கான குறைந்தபட்ச மரியாதை கூட கிடைப்பதில்லை. வாடிக்கையாளர் நமது சொத்து என கொட்டை கொட்டையாய் எழுத்தில் மட்டுமே எங்கும் பார்க்க முடியும் நம் நாட்டில். வாடிக்கையாளர் சேவை என்பது பூஜ்யம்தான்.

இதெல்லாம் முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு எனது வங்கியில் இருந்து கீழே உள்ள மின்னஞ்சல் வந்திருந்தது.
படிப்தற்கு முன் ஆஹா, நாம்தான் நம் வங்கியை தவறாக நினைத்து விட்டோமோ, என எண்ணிக்கொண்டே, மின்னஞ்சலை திறந்தேன்.

"Dear Customer, Your query is being attended to. We will revert to you within 7 working days. Looking forward to your co-operation and patience in the interim" - Customer Support.

போங்கடா நீங்களும் உங்க கஸ்டமர் கேரும்...

Thursday, June 3, 2010

காதல் நாட்குறிப்பில் கிழிந்த பக்கங்கள்.




கல்லூரியில் படிக்கையில் நண்பர்களில் ஒருத்தியாய் என் வீட்டிற்க்கு வந்திருந்தாய் நீ. எல்லோரும் சலசலவென பேசிக்கொண்டிருக்க நீ மட்டும் அமைதியாய் என் அம்மா கொடுத்த தேநீர் பருகினாய். மற்றவர்கள் என்னிடமிருந்து மட்டும் விடைபெற, நீயோ என்னைத்தவிர என் குடும்பத்தினர் எல்லோரிடமும் விடைபெற்றாய். நீ போனபின் உன்னைமட்டும் நினைவு வைத்துக்கொண்டு விசாரித்த என் அம்மாவுக்கு, "நம்ம வீட்ல அந்தப் பொண்ணுக்கு நிரந்தரமாய் ஒரு தேநீர் கோப்பை வாங்கி வை" என்று சொல்ல துணிவு வரவில்லை அப்போது.

என் அம்மா உனக்கு கொடுத்தனுப்பும் பதார்த்தங்களை உண்டுவிட்டு, டப்பா முழுவதும் சாக்லேட் நிரப்பித்தருவாய். என்னால் இது மட்டுமே முடியும் என்று. ஆனால் அதைவிட அழகாய் நன்றி சொல்ல யாராலும் முடியாது. கடவுள்களுக்கு செல்லப்பெயர் வைத்து நீ கூப்பிடும் அழகில், தெய்வங்களே உன்னிடம் நட்பு பாராட்ட வரும்போது நான் மட்டும் உன் நட்பினை மறுப்பேனா என்ன?. குங்குமத்திற்கு மேலே விபூதிக் கீற்றலுடன், காற்றில் அலையும் கூந்தலுடன் வரும் உன் வருகையை வாசமாய் அறிவிக்கும் காற்றுடன் சேர்ந்து என் இதயமும் உன் பின்னால் பறக்க ஆரம்பித்தது.

மீதமிருக்கும் கல்லூரி நாட்கள் குறுகக் குறுக, இறுகிக்கொண்டே வந்தது நம் நட்பு. நட்பையும் மீறிய ஒரு உறவை உன்னிடம் நான் உணரத்தொடங்கிய நாட்களில் உன் கண்களை நேராக பார்க்க கூசத்தொடங்கினேன். உன்னருகில் இருக்கும்வரை எதுவுமே பேசத் தோன்றாது எனக்கு. ஆனால் நீ கிளம்பிப் போன பிறகுதான் உன்னிடம் இன்னும் சிறிது நேரம் பேசி இருக்கலாமோ என பேச மறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரும். என் வீட்டிற்க்கு செல்ல எத்தனையோ வழிகள் இருந்தும், உன் இருப்பிடம் கடந்து செல்லும் வழியே சிறந்தது என நினைக்க ஆரம்பித்தேன். சமயத்தில் உன் பெயரை சொல்லி மற்றவர்களை அழைத்து அவர்களின் நகைப்புக்கும் ஆளாகினேன்.

மனித முகங்களற்ற கிரகத்தினை சேர வேண்டும். அதில் உயிருள்ள பொருட்களாய் நீயும் நானும் மட்டும். கனவுகள் மட்டும் உண்டு, கவிதைகள் மட்டும் உடுத்தி, காதலை மட்டும் சுவாசித்து வாழ்கையின் ஓரத்தை அடைந்திட வேண்டும் என ஏதேதோ கற்பனைகள் செய்து எப்போது உறங்கினேன் என அறியாமல் உறங்கிப்போயிருக்கிறேன். எங்கு சென்றாலும் விடாமல் துரத்த ஆரம்பித்தது உன் ஞாபகம். எங்கு நோக்கினாலும் இருளாய் இருக்க, வெளிச்சமான சமவெளிக்கு நீ மட்டுமே கூட்டிச்செல்வதாய் நினைத்து உன் விரல்பற்றி நடக்கத் தொடங்கியிருந்தேன் நான்.

உனக்காக எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் உன்னைச் சேரும் அரங்கேற்றம் காணமலேயே கலைந்து போயின. உன் சின்ன சின்ன அசைவுகளும் எனக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்த, நீயோ மறுபடியும் மறுபடியும் என்னை தடுமாற வைத்துக் கொண்டிருந்தாய். உன் காலடி ஓசை கேட்டாலே மனம் படபடக்க ஆரம்பித்தது. நீ கூறி காற்றில் கரைந்து போன வார்த்தைகளில் ஏதேனும் அர்த்தம் இருக்குமா என தேடிக்கொண்டிருந்தேன். எந்த வகையிலாவது உனக்கு என் காதலை விளங்க வைக்க முயன்று ஒவ்வரு முறையும் தோற்றுக்கொண்டே இருந்தேன். நேரான இன்பங்களுக்கு ஊடே, சிறிதளவு எதிரான துன்பங்கைளையும் வழங்கிக் கொண்டிருந்தாய் நீ.

இதோ வந்தும் விட்டது. உன்னைப் பிரியப்போகும் நாளும்.
பத்து நிமிடத்தில் வரப்போகும் ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாய் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. நீயில்லாத நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற கலக்கத்தில் நிற்கிறேன் நான். நீயோ யாரையோ வழியனுப்பிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு வரும் பெயர்தெரியா மனிதர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய். எனக்காக ஏதாவது சொல், ஏதாவது செய்து என்னைக் காப்பாற்று என உன்னைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்கிறது என் மனது.

இப்படியும் அழுத்தமாய் ஒருத்தியா? என்று உன்மேல் சிறிது கோபமும் வந்தது. கடைசி நிமிடத்தில் கதவருகில் இழுத்து கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு என் கைகளை பற்றிக்கொண்டாய். உன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என் உள்ளங்கையில் பட்டுத்தெறித்தது. என்னவென்று யோசிக்கும் முன்பே உன்னைத் தூக்கிக்கொண்டு என் கண்களில் இருந்து ஓடி மறைந்தது ரயில். உன்னை வழியனுப்ப வந்தவன், என் வழி மறந்து நடந்து கொண்டிருக்கிறேன்.

Sunday, May 23, 2010

அன்பென்றாலே அம்மா!


நாளெல்லாம் உழைத்து
பின்னிரவில் இருப்பிடம் சேர்ந்து
பசியாற ஒன்றுமே இல்லாமல்
படுக்கையில் விழும்போது
உணர்கிறேன் அம்மா.
நான் சாப்பிட மறுத்து
நீயும் பட்டினியாய் உறங்கிய
உன் வலியை!.

------------------------------


நான் இல்லாத
நம் வீட்டின்
பண்டிகை நாட்கள்
உனக்கு,
மற்றவர்களுக்காக சமைப்பதோடு
மட்டுமே முடிந்துவிடுகிறது.

--------------------------


சற்றுமுன் நறுக்கிய
வெண்டையின் வாசத்தோடும்
வியர்வையில் கசங்கிய
புடவையோடு காட்சியளித்தாலும்
உனையன்றி இந்த உலகில்
எவளும் அழகில்லை அம்மா!...

அறிவாயா நீ?



ஒவ்வொரு முறையும்
உன்னைப்பிரிய நேர்கையில்
இருட்டறைக்குள் தள்ளிவிடப்படும்
குழந்தையாகவே உணருகிறேன்.
உன்னை பிரிதல் என்பது
தற்காலிகம்தான் என்றாலும்
அது ஏற்படுத்தும்
வெறுமை அளவிடமுடியாதது.
நீயோ பிரிதல்
காதலை அதிகரிக்குமென
தத்துவங்கள் பேசுகிறாய்.
கடிகார முட்களை
பிடித்து தொங்கினாலும்
அவை இரக்கம் காட்டி
நகர்வதே இல்லை.
நிறங்கலற்று பூக்கும்
காலையும் மாலையும்
என் வலிதாங்கி உதிரும்.
நீயில்லாத தருணங்களில்
நீண்டு பெருகும்
காலத்தின் பற்களில்
சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறேன்.
அகண்டவெளியில் தனியனாய்
உன்னைத்தேடி உன்மடி சேர
நான் ஏகும் பயணத்தின் வலி
அறிவாயா நீ?