Thursday, June 3, 2010

காதல் நாட்குறிப்பில் கிழிந்த பக்கங்கள்.




கல்லூரியில் படிக்கையில் நண்பர்களில் ஒருத்தியாய் என் வீட்டிற்க்கு வந்திருந்தாய் நீ. எல்லோரும் சலசலவென பேசிக்கொண்டிருக்க நீ மட்டும் அமைதியாய் என் அம்மா கொடுத்த தேநீர் பருகினாய். மற்றவர்கள் என்னிடமிருந்து மட்டும் விடைபெற, நீயோ என்னைத்தவிர என் குடும்பத்தினர் எல்லோரிடமும் விடைபெற்றாய். நீ போனபின் உன்னைமட்டும் நினைவு வைத்துக்கொண்டு விசாரித்த என் அம்மாவுக்கு, "நம்ம வீட்ல அந்தப் பொண்ணுக்கு நிரந்தரமாய் ஒரு தேநீர் கோப்பை வாங்கி வை" என்று சொல்ல துணிவு வரவில்லை அப்போது.

என் அம்மா உனக்கு கொடுத்தனுப்பும் பதார்த்தங்களை உண்டுவிட்டு, டப்பா முழுவதும் சாக்லேட் நிரப்பித்தருவாய். என்னால் இது மட்டுமே முடியும் என்று. ஆனால் அதைவிட அழகாய் நன்றி சொல்ல யாராலும் முடியாது. கடவுள்களுக்கு செல்லப்பெயர் வைத்து நீ கூப்பிடும் அழகில், தெய்வங்களே உன்னிடம் நட்பு பாராட்ட வரும்போது நான் மட்டும் உன் நட்பினை மறுப்பேனா என்ன?. குங்குமத்திற்கு மேலே விபூதிக் கீற்றலுடன், காற்றில் அலையும் கூந்தலுடன் வரும் உன் வருகையை வாசமாய் அறிவிக்கும் காற்றுடன் சேர்ந்து என் இதயமும் உன் பின்னால் பறக்க ஆரம்பித்தது.

மீதமிருக்கும் கல்லூரி நாட்கள் குறுகக் குறுக, இறுகிக்கொண்டே வந்தது நம் நட்பு. நட்பையும் மீறிய ஒரு உறவை உன்னிடம் நான் உணரத்தொடங்கிய நாட்களில் உன் கண்களை நேராக பார்க்க கூசத்தொடங்கினேன். உன்னருகில் இருக்கும்வரை எதுவுமே பேசத் தோன்றாது எனக்கு. ஆனால் நீ கிளம்பிப் போன பிறகுதான் உன்னிடம் இன்னும் சிறிது நேரம் பேசி இருக்கலாமோ என பேச மறந்த வார்த்தைகள் ஒவ்வொன்றாய் நினைவிற்கு வரும். என் வீட்டிற்க்கு செல்ல எத்தனையோ வழிகள் இருந்தும், உன் இருப்பிடம் கடந்து செல்லும் வழியே சிறந்தது என நினைக்க ஆரம்பித்தேன். சமயத்தில் உன் பெயரை சொல்லி மற்றவர்களை அழைத்து அவர்களின் நகைப்புக்கும் ஆளாகினேன்.

மனித முகங்களற்ற கிரகத்தினை சேர வேண்டும். அதில் உயிருள்ள பொருட்களாய் நீயும் நானும் மட்டும். கனவுகள் மட்டும் உண்டு, கவிதைகள் மட்டும் உடுத்தி, காதலை மட்டும் சுவாசித்து வாழ்கையின் ஓரத்தை அடைந்திட வேண்டும் என ஏதேதோ கற்பனைகள் செய்து எப்போது உறங்கினேன் என அறியாமல் உறங்கிப்போயிருக்கிறேன். எங்கு சென்றாலும் விடாமல் துரத்த ஆரம்பித்தது உன் ஞாபகம். எங்கு நோக்கினாலும் இருளாய் இருக்க, வெளிச்சமான சமவெளிக்கு நீ மட்டுமே கூட்டிச்செல்வதாய் நினைத்து உன் விரல்பற்றி நடக்கத் தொடங்கியிருந்தேன் நான்.

உனக்காக எழுதிய நூற்றுக்கணக்கான கவிதைகள் உன்னைச் சேரும் அரங்கேற்றம் காணமலேயே கலைந்து போயின. உன் சின்ன சின்ன அசைவுகளும் எனக்குள் தடுமாற்றத்தை ஏற்படுத்த, நீயோ மறுபடியும் மறுபடியும் என்னை தடுமாற வைத்துக் கொண்டிருந்தாய். உன் காலடி ஓசை கேட்டாலே மனம் படபடக்க ஆரம்பித்தது. நீ கூறி காற்றில் கரைந்து போன வார்த்தைகளில் ஏதேனும் அர்த்தம் இருக்குமா என தேடிக்கொண்டிருந்தேன். எந்த வகையிலாவது உனக்கு என் காதலை விளங்க வைக்க முயன்று ஒவ்வரு முறையும் தோற்றுக்கொண்டே இருந்தேன். நேரான இன்பங்களுக்கு ஊடே, சிறிதளவு எதிரான துன்பங்கைளையும் வழங்கிக் கொண்டிருந்தாய் நீ.

இதோ வந்தும் விட்டது. உன்னைப் பிரியப்போகும் நாளும்.
பத்து நிமிடத்தில் வரப்போகும் ரயில் இன்னும் இரண்டு மணிநேரம் தாமதமாய் வந்தால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது. நீயில்லாத நாட்களை எப்படி எதிர்கொள்ளப்போகிறேன் என்ற கலக்கத்தில் நிற்கிறேன் நான். நீயோ யாரையோ வழியனுப்பிவிட்டு கண்களைத் துடைத்துக்கொண்டு வரும் பெயர்தெரியா மனிதர்களுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறாய். எனக்காக ஏதாவது சொல், ஏதாவது செய்து என்னைக் காப்பாற்று என உன்னைப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்கிறது என் மனது.

இப்படியும் அழுத்தமாய் ஒருத்தியா? என்று உன்மேல் சிறிது கோபமும் வந்தது. கடைசி நிமிடத்தில் கதவருகில் இழுத்து கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டு என் கைகளை பற்றிக்கொண்டாய். உன் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் என் உள்ளங்கையில் பட்டுத்தெறித்தது. என்னவென்று யோசிக்கும் முன்பே உன்னைத் தூக்கிக்கொண்டு என் கண்களில் இருந்து ஓடி மறைந்தது ரயில். உன்னை வழியனுப்ப வந்தவன், என் வழி மறந்து நடந்து கொண்டிருக்கிறேன்.

Sunday, May 23, 2010

அன்பென்றாலே அம்மா!


நாளெல்லாம் உழைத்து
பின்னிரவில் இருப்பிடம் சேர்ந்து
பசியாற ஒன்றுமே இல்லாமல்
படுக்கையில் விழும்போது
உணர்கிறேன் அம்மா.
நான் சாப்பிட மறுத்து
நீயும் பட்டினியாய் உறங்கிய
உன் வலியை!.

------------------------------


நான் இல்லாத
நம் வீட்டின்
பண்டிகை நாட்கள்
உனக்கு,
மற்றவர்களுக்காக சமைப்பதோடு
மட்டுமே முடிந்துவிடுகிறது.

--------------------------


சற்றுமுன் நறுக்கிய
வெண்டையின் வாசத்தோடும்
வியர்வையில் கசங்கிய
புடவையோடு காட்சியளித்தாலும்
உனையன்றி இந்த உலகில்
எவளும் அழகில்லை அம்மா!...

அறிவாயா நீ?



ஒவ்வொரு முறையும்
உன்னைப்பிரிய நேர்கையில்
இருட்டறைக்குள் தள்ளிவிடப்படும்
குழந்தையாகவே உணருகிறேன்.
உன்னை பிரிதல் என்பது
தற்காலிகம்தான் என்றாலும்
அது ஏற்படுத்தும்
வெறுமை அளவிடமுடியாதது.
நீயோ பிரிதல்
காதலை அதிகரிக்குமென
தத்துவங்கள் பேசுகிறாய்.
கடிகார முட்களை
பிடித்து தொங்கினாலும்
அவை இரக்கம் காட்டி
நகர்வதே இல்லை.
நிறங்கலற்று பூக்கும்
காலையும் மாலையும்
என் வலிதாங்கி உதிரும்.
நீயில்லாத தருணங்களில்
நீண்டு பெருகும்
காலத்தின் பற்களில்
சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறேன்.
அகண்டவெளியில் தனியனாய்
உன்னைத்தேடி உன்மடி சேர
நான் ஏகும் பயணத்தின் வலி
அறிவாயா நீ?

Thursday, May 20, 2010

நீ நான் நம் காதல்!...

உன்னைப்பற்றி நான் எழுதிய
கவிதைகளை எல்லாம்
ஒரே மூச்சில் படித்துவிட்டு
எப்படி இத்தனை கவிதை
எழுதினாய் என்று
கேட்டாய் என்னிடம்!
உன் செயல்கள் அனைத்தையும்
வார்த்தைகளாய் மாற்றினாலே
ஒரு கவிதை தோன்றிடும் என்றேன்.
அய்யே! என உதடு சுழித்து
கண்கள் மூடி திறந்தாய்
எனக்குள் இன்னொரு
கவிதை பிறக்கத்தொடங்கியது...

...................................

அழகாய் கவிதை
எழுத மட்டுமல்ல,
மற்றவர் அறியாமல்
அழவும் கற்றுக்கொடுத்திருக்கிறது,
உன் பிரிவு!.

................................

அன்றொரு நாள் சாலையை கடக்கும்போது
வேகமாய் சென்ற வாகனத்திற்கு அதிர்ந்து
என் கையை இறுகப்பற்றிக்கொண்டாய்.
அதுவரை நம்மை வேடிக்கை மட்டுமே
பார்த்துக்கொண்டிருந்தது காதல்.
ஏனோ வீடு திரும்பும்வரை
கையை விடவேயில்லை இருவரும்.
வழியெங்கும் மௌனப்பூக்களை
இறைத்தபடியே நடந்தோம் நாம்.
நம்மோடு சேர்ந்து நடக்க
ஆரம்பித்து விட்டிருந்தது காதல்.
வீடு சேர்ந்தபிறகு அருகருகே
அமர்ந்து கொண்டோம் இருவரும்.
கதவை தாழிட்டுவிட்டு நமக்கு நடுவே
அமர்ந்து கொண்டது காதல்!.


Thursday, May 6, 2010

தேவதையால் ஆசிர்வதிக்கப்பட்டவன்...(Part 2)

................
நீ தூக்கிவைத்து கொஞ்சுவது
உன் அக்காவின் குழந்தைதான் என்றாலும்
தாங்க முடியவில்லை என்னால்.
'அதிர்ஷ்டக்காரண்டா நீ' என வலிக்காமல்
குழந்தையின் கன்னம் கிள்ளுவேன் நான்.
சிவக்க ஆரம்பிக்கிறது உன் கன்னம்.

................
அய்யய்யோ என் தோடு காணவில்லை
என பதறினாய் நீ.
நீ பத்துநாளாய் பார்க்காததினால்
கோபித்துக்கொண்டு எங்கோ போயிருக்கும் என்றேன்.
போடா! என்று சிணுங்கினாய்.
உன் காலடியில் விழுந்து
என்னைப்பார்! என்னைப்பார்! என்று
கதறிக்கொண்டிருந்த உன் தோடை எடுத்து
மறுபடியும் மாட்டிக்கொண்டாய் நீ.
உன் மற்றொரு தோடு கீழே
விழுவதற்கு யோசிக்க ஆரம்பித்தது.

................
நீ பூக்காரியிடம்
விலை கேட்கும்போதே
நான்தான் நான்தான் என
கூடையிலிருந்த எல்லா பூக்களும்
கைகொட்டி ஆர்ப்பரித்தன
உனக்குப்பிடித்த மஞ்சள் ரோஜாவை
மட்டும் நீ எடுத்துக்கொண்டு போனபின்
மற்ற பூக்கள் எல்லாம்
அழுவதற்கு தயாராயின.

................
காலையில் தாமதமாய் எழுந்தாயா?
உன்னை பார்க்காத கோபத்தில்
எங்களை எரித்துக்கொண்டிருக்கிறது
இந்த சூரியன்.

................
என்னடா எப்போ பார்த்தாலும்
தெருவிலே வேடிக்கை என
கேட்ட என் அம்மாவிடம்
இரும்மா! திருவிழா தேர் வருது என்றேன்.
இப்போ திருவிழாவே இல்லையே என்று
அம்மா வெளியே வந்தபோது
என் வீட்டை நீ கடந்து சென்றாய்.
தலையில் அடித்துக்கொண்டு
உள்ளே சென்றார் என் அம்மா.

................

Wednesday, May 5, 2010

எல்லாம் பிடித்தது உன்னால்... கடைசியில் பைத்தியமும்.


அன்றொரு நாள் பெய்த மழையில்
நீ எனக்காக குடை பிடித்தபோது
மழை பிடிக்க ஆரம்பித்தது.
நீ தோள்கள் உரசிக்கொண்டே அமர்கையிலும்
சமயத்தில் சாய்ந்துகொண்டே தூங்குகையிலும்
பேருந்து பயணம் பிடிக்க ஆரம்பித்தது.
பிரிதலைப்பற்றி உருக்கமாய்
நீ எழுதிய கவிதையால்
கவிதை பிடிக்க ஆரம்பித்தது.
மூக்குநுனி வேர்வையில் தீபவொளி மின்ன
நீ கைகுவித்து வேண்டுகையில்
பிள்ளையாரை பிடிக்க ஆரம்பித்தது.
யாருமே வாழ்த்தாது தனிமையில்
வாடியிருக்க, நீ மட்டும் வாழ்த்தியபோது
என் பிறந்தநாள் பிடிக்க ஆரம்பித்தது.
எனக்கு பிடித்த நிறத்தில் உடையணிந்து
என்முன் நீ நின்றபோது உடையோடு சேர்த்து
உன்னையும் பிடிக்க ஆரம்பித்தது.
என் காதல் சொல்லிவிட்டு காத்திருக்கையில்
மௌனமாய் நீ என்னை கடந்து சென்றபோது
பெண்ணே...
சத்தியமாய் எனக்கு
பைத்தியம் பிடிக்க ஆரம்பித்தது.

Tuesday, May 4, 2010

கலைந்த கனவும் சில கண்ணீர் துளிகளும்...(2)

-----------------------
நல்லதாய் ஒரு
வேலையில்லை
அழகாய் ஆங்கிலம்
பேசதெரியவில்லை
உட்கார வைத்து
ஊர்சுற்ற வண்டியில்லை
பெற்றவர்கள் தலையாட்ட
ஒரே ஜாதியுமில்லை
இதையெல்லாம் நீ
அன்றே சொல்லிருக்கலாம்
உனக்காக முதல்முதலாய்
50 ரூபாய்க்கு ரீசார்ஜ்
செய்த நாளன்று.

-----------------------
நீ இல்லையென்றால்
செத்துவிடுவேன் என
உன்னிடம் கதறியழுதேன்
நம்பாமல் உன்
திருமண அழைப்பிதழை
முகத்தில் வீசிச்சென்றாய்
நான் இறந்தபின்
என் இரங்கல் கூட்டத்தில்
கூறினாய் எனை
நம்புவதாக...

-----------------------
முன்பு
உன்னைப்பார்க்க வேண்டும் என்பதே
என் வேண்டுதலாய் இருந்தது.
இன்று
உன்னை பார்த்துவிடக்கூடாது என்பதே
என் வேண்டுதலாய் இருக்கிறது.

----------------------------
தாடி வைப்பது
காதல் தோல்வியின்
அடையாளம் என்றனர்.
தாடியே முளைக்காத
நானெல்லாம் என்ன செய்வது.

-- டவுசரை அடகு வைத்து காதலிப்போர் சங்கம்.